தமிழக நெடுஞ்சாலைகளில் இந்தி பெயர்கள் இடம்பெற்றது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழக மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் ஊரின் பெயிர்கள் இந்தியில் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு அரசு பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டிருந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இந்தியில் ஊர் பெயர்கள் இருந்ததால் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் (எண் 93) அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய தமிழகத்தில் மாநில அரசே இந்தியில் பெயர்களை எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டதைக் கண்டித்து பல போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், மாநில அரசே இந்தியில் ஊர்ப்பெயர்களை எழுதுவதை ஏற்க முடியாது. இதன் பின்னணி என்ன? யார் காரணம்? என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிகாட்டி பலகைகளில் இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.