பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தும், அதை சுற்றியுள்ள தாக்கப் பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்தியும் சீரழிக்க தனியார் கட்டுமான நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில், அதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு, மீண்டும் மீண்டும் கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உயரதிகாரிகளால் பின்னப்படும் இந்த சதிவலையை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறுத்தெறியாவிட்டால் பெரும் அவப்பெயரை சந்திக்க நேரிடும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சில தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்திருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தாக்கப்பகுதியின் பரப்பை குறைக்கும் தமிழ்நாடு மாநில ஈரநிலங்கள் ஆணையத்தின் தற்காலிக முடிவு குறித்து எந்த ஆணையையும் பிறப்பிக்க விரும்பவில்லை என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத தனியார் கட்டுமான நிறுவனங்களின் வழக்கறிஞர், குறைந்தபட்சம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை தாக்கப் பகுதியாக அறிவித்து, அங்கு புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தற்காலிகத் தடையை ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தினார்.
கட்டுமான நிறுவனங்களின் இந்தக் கோரிக்கைக்கு தமிழக அரசின் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப்பகுதியை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்ட 8,397 ஏக்கர் பரப்பளவிலிருந்து, 316 ஏக்கராக குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது தான் தமிழக அரசின் நிலை என்று தெரிவித்த அரசு வழக்கறிஞர், அதைத் தவிர வேறு வாதங்களையும் முன்வைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இவ்வழக்கில் இன்னும் சில நாள்களில் தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு நீதிமன்றங்கள் ஏராளமான வழக்குகளை விசாரித்துள்ளன. அரசை எதிர்வாதியாகக் குறிப்பிட்டு தொடரப்படும் வழக்குகளில், அரசும், வழக்கைத் தொடர்ந்த வாதிகளும் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுப்பது தான் வழக்கமாகும். ஆனால், இந்த விசித்திரமான வழக்கில் தான் அரசும், அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கட்டுமான நிறுவனங்களும் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ, அதாவது 8,397 ஏக்கர் தாக்கப் பகுதியாக கருதப்படும் என்று பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்திருந்த நிலையில், அதை 27-இல் ஒரு பகுதியாகக் குறைத்து 316 ஏக்கராக அரசு நிர்ணயித்துள்ளது. இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள தனியார் கட்டுமான நிறுவனங்கள், அதை உறுதி செய்து தீர்ப்பளிக்கும்படி உயர்நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டிருக்கின்றன. இது விந்தையிலும் விந்தை.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப்பகுதியை கட்டுமான நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழக அரசே தீர்மானிக்கக் கூடாது; அது அறிவியல்பூர்வமாக வரையறை செய்யப்பட்டு அறிவிக்கை செய்யப்பட வேண்டும்; அவ்வாறு அறிவிக்கை செய்யப்படும் போது, பள்ளிக்கரணை வடிநிலத்தின் 65 நீர்நிலைகளும், கால்வாய்களும் தாக்கப்பகுதியில் சேர்க்கப்பட வேண்டும்; இவற்றை செய்து முடித்த பிறகு விதிகளுக்கு உட்பட்டு புதிய கட்டுமானங்களை அனுமதிக்கலாம் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு.
ஆனால், உச்சநீதிமன்றமே பல முறை ஆணையிட்டும் கூட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வரையறை செய்ய மாட்டோம்; அதே நேரத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்ட தாக்கப்பகுதியின் பரப்பளவைக் குறைத்து, கட்டுப்பாடற்ற வகையில் புதிய கட்டுமானங்களை அனுமதித்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரழிக்கப்படுவதற்கு துணை நிற்போம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், இப்போதைய அரசுக்கும், இதற்கு முன்பு இருந்த அரசுக்கும் என்ன தான் வித்தியாசம்? அரசின் பணி பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற இயற்கையின் கொடைகளை பாதுகாப்பதா? அல்லது தனியார் கட்டுமான நிறுவனங்களின் பேராசைக்கு தீனி போடுவதற்காக அவற்றை அழிப்பதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
சென்னையின் ஒரே சதுப்பு நிலமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. இதற்காக கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம். இந்த வரத்தைப் பாதுகாப்பதற்காக எந்த எல்லைக்கும், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்திற்கும் சென்று சட்டப்போராட்டம் நடத்தவும் பா.ம.க. தயாராகவே உள்ளது.
ஒரு காலத்தில் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கராக சுருங்கிவிட்டது. அதையாவது பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாகத் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமின்றி, 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளையும் வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று 11.12.2024-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த திமுக, ஒருபுறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்து விட்டதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து விட்டு, இன்னொருபுறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியை கட்டுமான நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதற்கு வசதியாக, அதில் 3 கி.மீ தொலைவுக்கு 6 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும், 2 கி.மீ நீளத்திற்கு நடைபாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அந்தப் பணிகள் கைவிடப்படவில்லை; மாறாக தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இன்னொருபுறம் தாக்கப்பகுதியை 27-இல் ஒரு பகுதியாக குறைக்க அரசு தீர்மானிக்கிறது. இவையெல்லாம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு முன்பாக நடந்தவை. அதன்பின், பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலங்கள் தொடர்பான வழக்கு கடந்த 12.10.2026-ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 4 மாதங்களில், அதாவது 11.02.2027-க்குள் தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு மதிப்பதாக இருந்தால், சதுப்பு நிலங்களை துல்லியமாக அளவிடும் பணி ஓராண்டுக்கு முன்பே 99% முடிவடைந்து விட்ட நிலையில், மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து பள்ளிக்கரணை உள்ளிட்ட 26,883 சதுப்பு நிலங்களையும் அறிவிக்கை செய்ய வேண்டும். அதுவரை, அதாவது இன்னும் 3 மாதங்களுக்கு தாக்கப்பகுதியில் கட்டுமானத் தடை நீடிப்பதால் வானம் இடிந்து விழுந்து விடாது.
இதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளேன்; 3 முறை அறிக்கை வெளியிட்டுள்ளேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதை ஆக்கிரமிக்க வசதியாக கட்டப்படும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதையை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அதேபோல், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டப் பேரவைக் கட்சித் தலைவருமான முனைவர் சௌமியா அன்புமணி அவர்களும் பள்ளிக்கரணையை நேரில் பார்வையிட்டு, இதே கருத்தை வலியுறுத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு கடிதம் எழுதிய சௌமியா அன்புமணி அவர்கள், தமிழ்நாடு மாநில ஈரநிலங்கள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் இராகேஷ்குமார் ஜகானியாவை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினார். பாமகவின் இவ்வளவு அழுத்தங்களையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவாக, இந்த விஷயத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றால், அதில் தான் அதிகாரிகளின் சதி அடங்கியுள்ளது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்படாவிட்டால், சென்னை மாநகருக்கு ஏற்படும் பேரழிவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்த விவகாரத்தில் மக்களின் உணர்வுகளைக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசுக்குத் தான் அவப்பெயர் ஏற்படும். அதைத் தடுக்கும் வகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பள்ளிக்கரணை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் உடனடியாக அறிவிக்கை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக முன்னெடுக்கும். மக்கள் போராட்டத்தின் வாயிலாகவும், உச்சநீதிமன்றம் வரையிலான சட்டப் போராட்டத்தின் வாயிலாகவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பா,ம.க. நிச்சயமாக பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்.