தமிழக செய்திகள்

தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல் பற்றி உயர்மட்ட விசாரணை தேவை: அன்புமணி வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பேருந்துகளை தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க ஆணையிட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தருமபுரி பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் 1978-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்தப் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும், இன்னொரு பகுதியிலிருந்து புறநகர் மற்றும் நீண்ட தொலைவு பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், முந்தைய திமுக ஆட்சியில், தருமபுரிக்கு கூடுதல் பேருந்து நிலையம் கட்டுவதற்கான தீர்மானம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்டு, பென்னாகரம் சாலையில் உள்ள ஏ. ரெட்டிஅள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்தால் கொடையாக வழங்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில், ரூ.39.14 கோடியில் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. திமுக ஆட்சியின் கடைசி கட்டத்தில் கடந்த பிப்ரவரி 8-ஆம் நாள் எந்த முன்னறிவிப்பும் இன்றி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது. அன்று இரவிலிருந்தே அனைத்து பேருந்துகளின் இயக்கமும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

தருமபுரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஏ. ரெட்டிஅள்ளி கிராமத்திற்கு கட்டப்பட்டது கூடுதல் பேருந்து நிலையம் தான் என்பதால் பழைய பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்; வேண்டுமானால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்ட மற்றும் தொலைதூர பேருந்துகளை மட்டும் இயக்கியிருக்கலாம். ஆனால், அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டதால் வெளியூர்களில் இருந்து தருமபுரிக்கு வந்து செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் நகரப் பகுதிக்குள் தான் உள்ளன. நகரத்திற்குள் உள்ள கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணி செய்கின்றனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளும் நகருக்குள் இருப்பதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். ஆனால், இவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் 5 கி.மீ.க்கு அப்பால் பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால், தருமபுரி நகருக்கு வரும் ஒவ்வொருவரும் பல கி.மீ கூடுதலாக பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், தேவையற்ற தாமதமும், கூடுதல் செலவும் ஏற்படுகின்றன. புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் செல்ல ஒவ்வொருவரும் ரூ.20 முதல் ரூ.100 வரை செலவழிக்க வேண்டியுள்ளது. மேலும், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வந்த கடைகள் வணிகத்தை முற்றிலுமாக இழந்துள்ளன. இதனால், வணிகர்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தருமபுரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த ஆட்சியின் பேரவைக் கூட்டத்தில் அப்போதைய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் வினா எழுப்பினர். அதற்கு பதிலளித்த அப்போதைய நகராட்சி நிர்வாகத் துறை கே.என். நேரு, தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், அமைச்சர் வாக்குறுதி அளித்தும் கூட அதன் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனினும், மாவட்ட நிர்வாகத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன் அவையும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டன. இதனால், தருமபுரி பழைய பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு, அது சாதாரணமான பேருந்து நிறுத்தமாக மாற்றப்பட்டு விட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி புதிய சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், கடந்த 15&ஆம் நாள் தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசிய போது, குறைந்தபட்சம் தருமபுரி மாவட்டத்திற்குள் இயங்கும் பேருந்துகளை மட்டுமாவது பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது தொடர்பாக 4 நாள்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மாவட்ட ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தருமபுரி மாவட்ட மக்களின் பாதிப்பும், துயரமும் தொடர்கின்றன.

முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கி இப்போதைய மாவட்ட நிர்வாகம் வரை அனைத்துத் தரப்பினரும் தருமபுரி மாவட்ட மக்களின் நலன்களையும், வசதியையும் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு காரணம், தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை அமைப்பதில் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடத்தப்பட்ட ஊழல் தான். எந்தவொரு நகரத்திலும் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் போது மக்களால் எளிதில் அணுகக் கூடிய இடத்தில் தான் கட்டப்பட வேண்டும். ஆனால், தருமபுரியில் 5 கி.மீ தொலைவுக்கு அப்பால் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதற்கு காரணம் தனியார் நிறுவனம் லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கம் தான்.

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும், அதன் உரிமையாளர்களும் ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்களை வைத்திருக்கிறார்கள். அந்த நிலங்களின் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அந்த நிறுவனம் 10 ஏக்கர் நிலத்தை கொடையாகத் தந்துள்ளது. இதற்காக முந்தைய திமுக ஆட்சியின் அமைச்சர்கள், தருமபுரி மாவட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகத்தின்அதிகாரிகள் ஆகியோருக்கு பெரும் தொகை கையூட்டாக கொடுக்கப்பட்டதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, நிலத்தின் மதிப்பை உயர்த்துவதற்கான தங்களின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தங்களுக்கு சாதகமாக செயல்படக் கூடிய ஒருவரை திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தி நகராட்சித் தலைவராக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால், தனியார் கொடையாக கொடுத்த நிலத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் அந்த நிறுவனத்திடமே திமுக அரசு தாரை வார்த்திருப்பது தான். இதனால் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு அதிக வாடகை வசூலிக்கப்படுவது மட்டுமின்றி, தள்ளுவண்டிகள், மிதிவண்டிகள் போன்றவற்றில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், திண்பண்டங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சிறு மற்றும் குறு வணிகர்களை பேருந்து நிலையத்திற்குள் நுழைய விடாமல் நிர்வாகம் விரட்டியடிக்கிறது. பழைய பேருந்து நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.5.5 கோடி வருவாய் கிடைத்து வந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை கட்டி நடத்தும் தனியார் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.55 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும் என அரசு சலுகை அளித்துள்ளது. இந்த வகையில் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது கூடுதல் ஊழல் ஆகும்.

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை அதிகரிக்கச் செய்வதற்காக அந்த நிறுவனத்துடன், முந்தைய ஆட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டுச் சதி செய்திருப்பதை அனுமதிக்க முடியாது. தருமபுரியில் மட்டுமின்றி, இராசிபுரம், ரிஷிவந்தியம், கும்பகோணம் உள்ளிட்ட பல நகரங்களில் புதிய பேருந்து நிலையங்களை அமைப்பதில் இதேபோல் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த நகரங்களிலும் திமுக நிர்வாகிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பை உயர்த்தும் நோக்குடன் அவற்றுக்கு அருகிலேயே பேருந்து நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த வகையில் மட்டும் திமுகவினருக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மக்களின் நலன்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், தங்களின் சொத்து மதிப்பை உயர்த்தும் வகையில் தான் முந்தைய ஆட்சியாளர்கள் ஊழல் செய்துள்ளனர்.

இவ்வாறாக முந்தைய திமுக ஆட்சியில் தருமபுரி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் விஷயத்திலும், அதேபோல் தமிழ்நாட்டின் பல நகரங்களில் பேருந்து நிலையம் அமைப்பதிலும் நடைபெற்ற கூட்டுச் சதி மற்றும் ஊழல் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உயர்நிலை விசாரணை நடத்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, தருமபுரி மாவட்ட மக்களின் நலன் கருதி, தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பேருந்துகளை தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க ஆணையிட வேண்டும். இதை செய்யத் தவறினால் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.