அன்புமணி ராமதாஸ் 
தமிழக செய்திகள்

ஏற்காடு பண்பலை வானொலியில் வேளாண்மை, காலநிலை சார்ந்த உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வேண்டும்!- அன்புமணி

காலநிலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட விவரங்கள் பண்பலை வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டால், அது அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நோக்கத்தை நிறைவேற்ற உதவாது

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பண்பலை வானொலி நிலையம் (அலைவரிசை: 103.7 மெகா ஹெர்ட்ஸ் ) தரம் உயர்த்தப்பட்டு, கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில், அதில் இன்னும் உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படவில்லை. மாறாக, தேசிய அளவிலும், மாநில அளவிலும் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ரிலே ஒலிபரப்பாக செய்யப்படுகின்றன. இது ஏற்காடு பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.

பண்பலை வானொலிகள் மேம்படுத்தப்பட்ட சமூக வானொலிகள் தான். சமூகத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவது தான் அவற்றின் நோக்கம். ஏற்காட்டில் பண்பலை வானொலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வேளாண்மை, கல்வி, வானிலை உள்ளிட்ட காலநிலை ஆகியவை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவது தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் டெல்லியில் இருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புவது அந்த வானொலி நிலையங்களின் வருவாயைப் பெருக்க உதவுமே தவிர, பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.

அதிலும் குறிப்பாக ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அங்கு நிலவும் காலநிலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட விவரங்கள் பண்பலை வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டால், அது அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

எனவே, ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும். சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சுற்றுலா சார்ந்த தகவல்களையும், கலை, இலக்கியச் செழுமையையும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.