பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படாததைக் கண்டித்து அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமாக ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். உழைத்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 10 நாள்களுக்கு மேலாகியும் ஊதியம் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மருத்துவப் பணியாளர்களின் போராட்டத்தால் சென்னையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் இன்று காலை முதல் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் தவறால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது.
மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும் உழைத்த பணியாளர்களுக்கு ஊதியத்தை நிறுத்தி வைப்பதோ, வழங்க மறுப்பதோ நியாயமல்ல; அது மனித உரிமைகளுக்கு எதிரானது.
எனவே, சென்னை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் பிற கோரிக்கைகளையும் மாநகராட்சியும், அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.