சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதன் பின் மூன்று மாதங்களாகியும் இன்னும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மார்ச் மாதம் நிறைவடைந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களில் தகுதியுடையவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களை திமுக அரசு தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஏமாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அறிவித்தார். அதன்பின் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை ஜனவரி 10-ஆம் தேதி திமுக அரசு வெளியிட்டது. இவை அனைத்தையும் கடந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் அரசு அறிவித்தது. ஆனால், அது இன்று வரை நடைமுறைக்கு வராமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.
அதேபோல் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைப்படி , ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் போராடி வந்த நிலையில் அவர்களின் ஊதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அவர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை. மார்ச் மாதத்திலாவது ஊதிய உயர்வு கிடைக்கும் என கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இந்த மாதமும் அவர்களுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததற்கும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு இரு மாதங்களாக வழங்கப்படாததற்கும் சிறப்புக் காரணங்கள் எதுவும் இல்லை. அரசு ஊழியர்களையும், கவுரவ விரிவுரையாளர்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணமும், சதியும் தான் காரணம் ஆகும். திமுக அரசு நினைத்திருந்தால், இந்த இரு அறிவிப்புகளையும் முறையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லை.
ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுக செய்தது எல்லாம் வானத்தை வில்லாய் வளைப்போம் என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவது தான். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமின்றி அனைத்துத் துறையினரையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறது. இதை அவர்கள் எவரும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
கஞ்சா வணிகர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் குற்றவாளிகள், சந்துக் கடைகளில் சட்டவிரோதமாக மது வணிகம் செய்பவர்கள் போன்றோர் தான் திமுக ஆட்சியில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறார்கள். ஆட்சியாளர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் எவரும் மகிழ்ச்சியாகவும் இல்லை, மனநிறைவாகவும் இல்லை. காரணம்.... மோசடிகளின் மொத்த உருவமாக திமுக அரசு திகழ்வது தான்.
திமுக ஆட்சியாளர்களின் மோசடிகளையும், துரோகங்களையும் தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். இன்னும் 3 வாரங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனையை வழங்குவார்கள். அது திமுகவால் மறக்க முடியாத தண்டனையாக இருக்கும் என்றார்.