தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா மற்றும் 10 பேரின் கைது கண்டிக்கத்தக்கது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தேர்தல் பரப்புரையின்போது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இப்போது கைது செய்வது தேவையற்றது என்றும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் இன்று கோவையில் கைது செய்திருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக அதிகாலை வேளையில் வந்து நாம் தமிழர் வேட்பாளர், அவரது கணவர் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தேர்தல் பரப்புரையின் போது தமது பரப்புரைக்கு அரசு எந்திரம் மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகக் கூறி நாம் தமிழர் வேட்பாளரும் பிற நிர்வாகிகளும் போராட்டங்களை நடத்தினார்கள்.
அதற்காக அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இப்போது கார்த்திகா உள்ளிட்டோரை கைது செய்திருப்பது தேவையற்றது. உடனடியாக கார்த்திகாவையும், மற்ற நிர்வாகிகளையும் காவல்துறை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.