அன்புமணி ராமதாஸ்
தமிழக செய்திகள்

பன்னீர், வெண்ணெய் உற்பத்தி நிறுத்தம்: ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது- அன்புமணி ராமதாஸ்

ஆவின் நிறுவனத்தின் சார்பில் 230-க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பால் பொருள்களின் எண்ணிக்கையை குறைப்பதால் எந்த பயனும் ஏற்படாது. அது ஆவின் நிறுவனத்தை புதை குழியில் தள்ளுவதற்கே வழி வகுக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், சந்தையின் தேவையை நிறைவேற்ற முடியாமல் ஆவின் நிறுவனம்தான் தடுமாறி வருகிறது.

15 சதவீதம்தான் பால் வழங்குகிறது ஆவின்

மக்களுக்கான பால் தேவையில் 15 முதல் 16 சதவீதம் வரை மட்டுமே வழங்கி வரும் ஆவின் நிறுவனம், இப்போது பிற பால் பொருட்களின் உற்பத்தியையும் முழுமையாக நிறுத்தியுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் சார்பில் 230-க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அண்மைக் காலமாக பன்னீர், வெண்ணெய், பல வகை மில்க்ஷேக், பால் பவுடர், பாதாம், பிஸ்தா, வால்நட் மிக்ஸ் பவுடர், குக்கீஸ், சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல், ஆவின் நெய் உற்பத்தி மற்றும் விற்பனையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பொருள்களை வாங்க வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டி உள்ளது.

பன்னீர், வெண்ணெய்க்கு மக்களிடம் வரவேற்பு

பன்னீர், வெண்ணெய், நெய், பல வகையான குளிர் பானங்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில், அதை நிறைவேற்றுவதில் ஆவின் நிறுவனத்திற்கு என்ன சிக்கல்? எனத் தெரியவில்லை.

பால் உற்பத்தியில் தமிழ்நாடு 11-வது இடம்

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 11-ம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1.15 கோடி டன், அதாவது 1,120 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும் 3.06 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது குறைந்தது ஒரு கோடி லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கையாண்டால் மட்டும்தான், தமிழ் நாட்டில் பால் மற்றும் பால் பொருள்களின் விலையை ஆவின் நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அது நடக்கவில்லை.

ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பால் பொருள்களின் எண்ணிக்கையை குறைப்பதால் எந்த பயனும் ஏற்படாது. அது ஆவின் நிறுவனத்தை புதை குழியில் தள்ளுவதற்கே வழி வகுக்கும்.

எனவே, ஆவின் நிறுவனத்தின் இப்போதைய செயல்பாடுகள் குறித்து ஆராயவும், அதன் வளர்ச்சி மற்றும் இலாபத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் வல்லுனர் குழு அமைத்து அதன் அறிக்கையை பெற்று செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT