கண்ணீர் விட்டு அழுத இளம்பெண்ணுக்கு அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார்.  
தமிழக செய்திகள்

‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்

தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.

சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான். அவர்களுக்குப் பண்பாட்டையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச்சொல்லி, அன்போடு திருத்துவோம் என்றார்.

ஆலோசனைக் கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்த போது இளம்பெண் நிர்வாகி ஒருவரின் பேச்சு அங்கிருந்தோரை உலுக்கியது.

ரீல்ஸ் மோகம்

அவர் பேசுகையில், "இன்றைய டிஜிட்டல் உலகில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பலரும் 'ரீல்ஸ்' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கிண்டலாகவும், விளையாட்டுத்தனமாகவும் பகிர்ந்து வருகிறார்கள். இது என்ன மாதிரியான நாகரிகம்?, இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது என்று பேசினார்.

மேலும், "திறமையான ஆளுமைகளும், மாபெரும் தலைவர்களும் கண்ணியம் காத்த தமிழக சட்டமன்றம் இது. தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அவரது இந்த கேள்வி கூட்டத்தில் இருந்த மூத்த நிர்வாகிகள் பலரையும் சிந்திக்க வைத்ததுடன், அங்கு ஒரு நிமிடம் பெரும் அமைதியை ஏற்படுத்தியது.

அன்போடு திருத்துவோம்...

அழுத பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாகப் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி, "அழாதீர்கள், உங்கள் ஆதங்கம் நியாயமானது. சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான். அவர்களுக்குப் பண்பாட்டையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச்சொல்லி, அன்போடு திருத்துவோம்" என்று கூறி தேற்றினார்.