முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசுக்கு ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் அவரது தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அங்கீகாரம், அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளிகளிடம் 400 கோடி ரூபாய் வசூலித்து மேசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த மாதம் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை, நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, அன்பில் மகேஷ் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் இன்று ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், அன்பில் மகேசுக்கு ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தார். இந்த மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை இன்றைக்குள் முடித்துவிட்டால், வழக்கை நாளை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
அதேபோல் இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ள, தனியார் பள்ளிகளிடம் நிதி வசூலித்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என மூத்த வக்கீல் வில்சன் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.