தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இதையடுத்து, அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனுவை 5-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு தொடங்கியது.
அன்பில் மகேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் வாதத்தில்,
* அன்பில் மகேஷிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது.
* போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது கேட்டப்பட்ட அனைத்து கேள்விகளும் அன்பில் மகேஷ் தரப்பில் முறையாக பதில் அளிக்கப்பட்டது.
* திருச்சி, சென்னையில் இருந்து அன்பில் மகேஷின் ஆடிட்டர்கள் வந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.
* சமூகத்தில் அந்தஸ்து உள்ள மனிதராக இருந்தாலும் அன்பில் மகேஷ் தலைமறைவாகவில்லை, ஓடி ஒளியவில்லை, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.
* சாட்சிகளை கலைக்கவில்லை எனவே ஜாமின் வழங்க வேண்டும்.
* தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற முறைகேடாக பணம் பெற்ற இந்த வழக்கில் A1 அரசக்குமார் தான்.
* புகார்களின்படி அரசக்குமார் தான் பணம் பெற்று மோசடி செய்ததாக உள்ளது.
* அன்பில் மகேஷ் கைகள் கறைபடியாதவை. அவர் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யான குற்றச்சாட்டுகள்.
* ஊழல் புகார்கள் இனி லஞ்ச ஒழிப்புத்துறையில் அளிக்காமல் குற்றப்பிரிவிடம் அளிப்பார்களா?
* விலைவாசியைப்போல் இந்த வழக்கில் 100, 200, 400, 600, 800 கோடி என வழக்கின் தொகையும் ஏறிக்கொண்டே போகிறது.
* அன்பில் மகேஷ் மீதான வழக்கில் ஊடக விசாரணை தான் நடக்கிறது.
* பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கும் விவகாரத்தில் சட்டத்தை கடுமையாக ஆக்கியதுதான் அன்பில் செய்த தவறா?
* அங்கீகாரம் வழங்குவது தொடர்பான அரசாணை பல துறை அதிகாரிகளை கடந்து சென்றுள்ளது.
* பல துறைகளில் அரசாணை வெளியாகிறது, அப்படி என்றால் அவர்கள் எல்லாம் சதியில் ஈடுபட்டார்களா? என்று கூறினார்.