ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம், கண்துடைப்பு நாடகமாக மட்டும் இருக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
‘ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்’ தொடர்பாக த.வெ.க. அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் சங்கங்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுகிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதற்கு முதல்நாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஆசிரியர் தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது!
அப்படி குறைத்தால் தேர்விற்கான மதிப்பு குறைந்துவிடும்’ என ஆசிரியர்களுக்கு எதிராக வாதாடியுள்ளது த.வெ.க. அரசு. ஆனால் அதற்கு மறுநாள் தீர்மானம் எனும் பெயரில் நாடகம் ஆடியுள்ளதா எனும் கேள்வி ஆசிரியப் பெருமக்களிடம் எழுந்துள்ளது.
2025 செப்டம்பர் 1 அன்று ‘அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற வேண்டும்’ என மாண்பமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உடனடியாக அதே நாளில் செய்தியாளர்களைச் சந்தித்து ‘இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்’ என திராவிட மாடல் அரசின் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அறிவித்தோம்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.
‘மேல்முறையீடு செய்யப்படும்’ என்ற தலைவர் அவர்களின் அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றார்கள். அதற்காக என்னை நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தார்கள்.
2025 செம்படம்பர் 11 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கழகமும், திராவிட மாடல் அரசும் ஆசிரியர்களின் மனமறிந்து அவர்களை காக்கும் பணிகளில் இறங்கியது.
சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியான அடுத்த நாளே ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் சந்தித்து ஆசிரியர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தோம்.
இரண்டு முறை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினோம். அதற்கு அடுத்த நாளே 2025 நவம்பர் 22 அன்று அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களோடு இணைந்து சந்தித்து ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்களை எடுத்துக் கூறினோம்.
ஆசிரியர்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு நவம்பர் 25 அன்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அக்கடிதத்தில் ‘ஆசிரியர்களை பாதுகாப்பதுடன் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது என்றால் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார்.
தொடர்ந்து, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம்.
மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்கள்.
நவம்பர் 29 அன்று கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாத்திடுக’ என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
“இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள்.
கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்கள் 2025 டிசம்பர் 12 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கழகத் தலைவர் அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து, ஆசிரியர்களுக்காக சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கிடையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது.
தொடர்ந்து வந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.
2026 ஜனவரி 28 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்டார் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.
மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 25 அன்று குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் எனவும் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள்(Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம்(SCERT) ஒப்படைக்கப்பட்டது.
இச்சூழலில்தான் 2026 மே 29ஆம் தேதி சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க மறுத்துவிட்டது’. இதன் பிறகான சட்டப்போராட்டத்தை புதிதாக வந்த த.வெ.க அரசு மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை!
முந்தைய நமது திராவிட மாடல் அரசு ஆசிரியர்களுக்காக செய்த சிறப்பு செயல்பாடுகளையும் முடக்கும் வேகத்தில்தான் இந்த அரசு செயலாற்றியது. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்காக பயிற்சி கையேடுகள் வழங்குவதிலேயே தாமதம் ஏற்படுத்திய அரசுதான் இவ்வரசு.
அதோடு நில்லாமல் உயர்நீதிமன்றத்தில் ‘தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது’ என்று ஆணவமாகவும் வாதாடி உள்ளது என்பது மாற்றத்தை அல்லாமல் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தைதான் கொடுத்துள்ளது.
இந்த புதிய அரசின் செயல்பாடுகளை என்னவாக விளங்கிக்கொள்ள வேண்டும்? நீதிமன்றத்தில் வாதாடிய அரசின் முகம்தான் உண்மை முகமா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மை முகமா?
இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவதுடன் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆசிரியப் பெருமக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.