ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் 
தமிழக செய்திகள்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்.. அக்டோபர் 5-இல் கேரள முதலமைச்சரை சந்திக்கும் தமிழக அமைச்சர்கள் குழு

கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு கேரள முதலமைச்சரை சந்திக்க உள்ளது.

கேரளப் பகுதியில் உற்பத்தியாகி வீணாகச் செல்லும் ஆனைமலையாறு நீரை, நல்லாறு வழியாகத் திருப்பி தமிழகத்தில் உள்ள திருமூர்த்தி அணைக்குக் கொண்டு வருவதே ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் ஆகும்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆண்டுதோறும் சுமார் 8.5 முதல் 9 டி.எம்.சி நீர் திருமூர்த்தி அணைக்குக் கிடைக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் வறட்சியிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்

பல தசாப்தங்களாக கிடப்பில் கிடக்கும் இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோரிக்கைகளைத் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு வரும் அக்டோபர் 5 ஆம் தேதி (திங்கள்கிழமை) கேரள முதல்வர் வி.டி. சதீசனை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் மற்றும் ராஜேஷ்குமார் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஆனைமலையாறு – நல்லாறு நீர் திட்டத்தை மீண்டும் தொடங்கி, இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்துவதே இந்த சந்திப்பின் முதன்மை நோக்கமாகும்.

SCROLL FOR NEXT