தமிழக செய்திகள்

அமோனியா கசிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்- சீமான்

தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கான பின்புலம் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.

ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும் நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகையால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது.

அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும்.

சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை.

அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். மேலும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.