தமிழக செய்திகள்

அமோனியா கசிவு: தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்- உதயநிதி

தொழிலாளர் நலனிலும்- பாதுகாப்பிலும் எந்தவொரு சமரசத்திற்கும் அரசு இடம் கொடுக்க கூடாது.

திருவள்ளூர் கன்னிகைப்பேரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு ஏற்பட்டு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும், தொழிலாளர் நலன், பாதுகாப்பில் எந்தவொரு சமரசத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும்.

தொழிலாளர் நலனிலும் - பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT