தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்தபோதும் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார். அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கினார். முன்னதாக அ.ம.மு.க. எம்.எல்.ஏ. த.வெ.க.வுக்கு ஆதரவாக கடிதம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், தனது கட்சி எம்.எல்.ஏ. கடத்தப்பட்டு இருக்கலாம் என்று டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகை விரைந்த அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் தான் த.வெ.க.வுக்கு ஆதரவாக கடிதம் வழங்கவில்லை என்று கூறினார். மேலும், தன் பெயரில் போலி கடிதம் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். போலி கடிதம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.