திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக செயலாளர் வேதாச்சலம் தங்கள் கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தவெக கட்சியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில் நாளுக்கு நாள் அக்கட்சியின் ஆதரவு பெருகி வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வேதாச்சலம் கொரட்டூரில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து தவெகவில் இணைவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேதாச்சலம், அமமுக கட்சியில் பணியாற்ற நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை எனவும், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் தலைமையில் தவெக கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். அதனால் அமமுக கட்சியிலிருந்து தங்கள் அனைவரையும் விடுவித்துக் கொண்டு தவெகவில் இணைந்துள்ளதாக அறிவித்தார்.