சேலம் மாவட்டம் ஒதியத்தூரில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை வரைவு செய்து, அறிஞர்களும், தேச விடுதலைப் போராட்ட வீரர்களும் நிரம்பிய அவையில் முன் மொழிந்து, விரிவாக விவாதித்து, ஒரு மனதாக நிறைவேற்றறிட பெரும் பங்களிப்பு செய்தவர் பேரறிஞர் அம்பேத்கர்.
அவரது கம்பீரமாக காட்சியளிக்கும் வடிவில் அவரது சிலை ஒதியத்தூரில் அமைக்கப்பட்டது. சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்ட சிலர் அண்ணல் அம்பேத்கர் சிலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பதற்றத்தை உருவாக்கி உள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை பராமரித்து, சாதி ஆதிக்க சக்திகளை ஒடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அந்த சமூக விரோதக் கும்பலுக்கு பணிந்து அம்பேத்கர் சிலையை அகற்றி விட்டது.
இந்தியாவின் மிகச் சிறந்த சமூக அறிஞரும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் சலிப்பறியாத போராட்டம் நடத்தியவருமான அம்பேத்கரை குறிப்பிட்ட சாதி எல்லைக்குள் அடைத்து அடையாளப்படுத்தும் செயல் நாட்டுக்கே அவமானமாகும்.
இந்த மாபெரும் குற்றச் செயலில் ஈடுபட்ட சிலரை தவிர்த்து, ஒட்டு மொத்த சமூகமும் ஏற்றுக் கொண்ட தலைவர் அம்பேத்கர் திருவுருவச் சிலையை அகற்றப்பட்ட, அதே இடத்தில் அரசு அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.