திருச்சி விமான நிலையத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளதா? என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சரும் இதற்கு உரிய விளக்கம் அளிப்பார்கள் என நம்புகிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முன்னாள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல. அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரை அச்சுறுத்த நினைத்து, தன்னிச்சையாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் அந்த கோரிக்கையை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.
தமிழக அரசு தலித் மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. தலித் மக்களை பாதுகாக்க தனிச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனை தற்போதைய அரசு செய்யும் என்று நம்புகிறோம். செய்யச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.