ஹரிபிரசாத்தின் உடலை மீட்ட காட்சி. 
தமிழக செய்திகள்

அம்பத்தூரில் மோட்டார் சைக்கிளோடு மழைநீர் கால்வாய்க்குள் விழுந்து வாலிபர் பலி

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் திருவேற்காட்டைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளோடு மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்தார்.

அம்பத்தூரில் மோட்டார் சைக்கிளோடு மழைநீர் கால்வாய்க்குள் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு, ஐ.சி.எப்.காலனியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 25). இவர் பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு வழக்கல் போல் பணி முடிந்ததும் ஹரிபிரசாத் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை வழியாக நூம்பல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மழைநீர் வடிகால்வாய்

அந்தச் சாலையில் ஏற்கனவே கடந்த 3 மாதத்திற்கு மேலாக மழைநீர் வடிகால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் கால்வாய் பள்ளம் அருகே பாதுகாப்புக்காக தடுப்புகள் எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது.

மேலும் அந்தப் பகுதியில் சாலையோர மின் விளக்குகளும் இல்லாததால் அப்பகுதி, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருக்கிறது.

விபத்து பலி

இந்த நிலையில் இரவு 12 மணி அளவில் ஹரிபிரசாத் அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது சாலையோர மழைநீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருப்பதை அறியாமல் அவர் மோட்டார் சைக்கிளோடு பள்ளத்தில் பாய்ந்து விழுந்தார். இதில், கட்டுமான பணிகளுக்காக நடப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் அவரது தலையில் ஆழமாகச் சொருகியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஹரிபிரசாத் பரிதாபமாக இறந்தார்.

தீயணைப்பு வீரர்கள்

இதனை கண்டு அவ்வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் மழைநீர் கால்வாய் பள்ளத்தில் இறங்கி பலியான ஹரிபிரசாத்தின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, அம்பத்தூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் கழிவுநீரை மதுரவாயல் அருகே கூவம் ஆற்றில் கலப்பதற்காக இந்தச் சர்வீஸ் சாலையில் மழைநீர் கால்வாய் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின் போது முறையான பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் இரவு நேர எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதுவே வாலிபரின் உயிரிழப்புக்கு காரணம். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பத்தூர்

இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் திருவேற்காட்டைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளோடு மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்தார். அவரது உடல் 3 நாள் கழித்து தான் கண்டுபிடிக்கப்பட்டது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மதுரவாயல் புறவழிச் சாலை சர்வீஸ் சாலையில், எவ்விதப் பாதுகாப்புத் தடுப்புகளும் இன்றித் தோண்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT