சென்னை அம்பத்தூர், அத்திப்பட்டு செல்லி அம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் ஷினு அலெக்ஸாண்டர் - ஜிஷா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இதில் இளைய மகள் நெஸ்லின் ரியாவை (5) காய்ச்சல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி அம்பத்தூரில் உள்ள தேஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இச்சூழலில் குழந்தை சிகிச்சை பலனின்றி மறுநாள் (டிச.4) உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில், தகுதி வாய்ந்த குழந்தைகள் நல மருத்துவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் மருத்துவர்கள் சரோஜினி மற்றும் ராஜா திக்விஜய் தேஜா ஆகியோர் தன்னிச்சையாக சிகிச்சை செய்ததால் தவறு நடந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடமும் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக பெற்றோர்களிடமும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் நீதிமன்றம் மற்றும் மருத்துவ கவுன்சில் உத்தரவின் பேரில், நாளை திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு பகுதியில் உள்ள கிறிஸ்துவ இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
திருவள்ளூர் மருத்துவமனை மருத்து கல்லூரி தலைவர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோரின் முன்னிலையில் உடல் கூறாய்வு நடைப்பெற உள்ளது.