தமிழக செய்திகள்

அம்பாசமுத்திரத்தில் உறவினரின் விரலை கடித்து துப்பிய வாலிபர் கைது

காயமடைந்த ஹரிஷ் சங்கரும், ரகுராமும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

அம்பாசமுத்திரத்தில் உறவினரின் விரலை கடித்து துப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் செக்கடி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஹரிஷ் சங்கர் (வயது 25). இவரது அத்தை மகன் அதே பகுதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (27). இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று கார்த்திக் தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் ஹரிஷ் சங்கரின் தம்பி ரகுராம் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், ரகுராமுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு

இதனைத் தொடர்ந்து ஹரிஷ் சங்கரும், ரகுராமும் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார்த்திக், அவர்களின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டி, ஹரிஷ் சங்கரை கன்னத்தில் அறைந்துள்ளார். தடுக்க வந்த ரகுராமையும் சரமாரி தாக்கி, அவரது விரலை கடித்து துப்பினார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. காயமடைந்த ஹரிஷ் சங்கரும், ரகுராமும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT