தமிழக செய்திகள்

தவெகவுடன் கைக்கோர்ப்பு - காங்கிரஸை கண்டித்து திமுக தீர்மானம் நிறைவேற்றம்

காங்கிரஸ் தவெகவிற்கு தாவியது கண்டனத்திற்குரியது என திமுக தீர்மானம் நிறைவேற்றம்.

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் நின்று வென்றுவிட்டு, தற்போது அதிலிருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது காங்கிரஸ்.

இந்நிலையில் காங்கிரஸின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியது. இதில் மக்கள் மற்றும் தோழமை கட்சிகளுக்கு நன்றி, கட்சித் தலைவருக்கு நன்றி, தலைவருக்கு அதிகாரம், காங்கிரஸிற்கு கண்டனம் என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் காங்கிரஸிற்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியதாவது,

“மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஒரு மாநிலங்களவை இடத்தையும், 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது.

கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது.

அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி.

அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும், பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கட்சித் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.