தமிழக செய்திகள்

மது கிடைக்காததால் சாலையில் படுத்து உருண்டு மதுபிரியர்கள் போராட்டம்

மது கிடைக்காத மதுப்பிரியர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மதுப்பிரியர்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் திருச்சி - நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், முசிறியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில், காலி மது பாட்டில்களை வாங்குவது தொடர்பான பிரச்சினையில் 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் மது வாங்குவதற்காக வந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மது வாங்க குவிந்தனர்

இந்நிலையில் முசிறியில் திருச்சி -நாமக்கல் சாலையில் செயல்படும் தனியார் மதுபான கடையில், மது வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அந்த கடையில் மது பாட்டில்கள் விரைவில் விற்றுத் தீர்ந்தன. இதையடுத்து மது கிடைக்காத மதுப்பிரியர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து, திருச்சி - நாமக்கல் மாநில நெடுஞ்சாலையில் மதுபானக் கடை முன்பு சாலையின் குறுக்கே படுத்தும், உருண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

போராட்டம்

மதுப்பிரியர்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் திருச்சி - நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு டாஸ்மாக் கடைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுப்பிரியர்கள் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT