அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. விலை உயர்ந்தாலும், அதன் மீதான மோகம் குறையாது என்பதை இது பறைசாற்றுகிறது. நடப்பாண்டில் அட்சய திருதியை நாளில் விற்பனை எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கிவிட்டது.
தங்கம் வெறும் உலோகமாக அல்லது அலங்கார பொருட்களாக மட்டும் யாரும் பார்ப்பது கிடையாது. அது உணர்ச்சிப் பூர்வமான மற்றும் பொருளாதார பாதுகாப்பு அரணாகவும் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவோ என்னவோ, அது எவ்வளவு விலை உயர்ந்தாலும் அதன் மீதான மோகம் கொஞ்சமும் குறையாமலேயே இருக் கிறது. அதற்கு உதாரணமாக அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் தேவை அதிகரித்து இருப்பதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு அட்சய திருதியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 'அட்சயம்' என்றால் குறையாதது என்று பொருள். இந்த நல்ல நாளில் தொடங்கும் எந்த நற்செயலும் பல மடங்கு பெருகும் என்பது கலாசார நம்பிக்கை. அந்த வகையில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்கு அடையாளமாக இந்த நாளில் சிறிய அளவிலாவது தங்கம் வாங்குவதை இந்தியாவில் பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
அதன்படி, அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதால், நடப்பாண்டில் விற்பனை குறையாது என்றே நகைக்கடை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். பொதுவாக சாதாரண நாட்களை காட்டிலும், அட்சய திருதியை நாளில் 3 முதல் 4 மடங்கு விற்பனை அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதே அளவுக்கு இந்த ஆண்டும் இருக்குமா? என்பது குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் கோல்டுகுரு சாந்தகுமாரிடம் கேட்டபோது. 'தங்கம் விலை உயர்வால், கடந்த சில மாதங்களாகவே விற்பனை சற்று குறைவாகவே இருக்கிறது. அட்சய திருதியை நாளில் விற்பனை ஓரளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விலை உயர்ந்து இருப்பதால், விற்பனை அளவை விட பண மதிப்பு அதிகரிக்கும். 18, 19-ந்தேதிகளில் அது பிரதிபலிக்கும்' என்றார்.
தங்கம் விலை உயர்வால் விற்பனை அளவு குறைந்தாலும், பண மதிப்பு சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. அதுவே இந்த ஆண்டு நேற்று வரையிலான நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 210-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 680-க்கும் விற்கப்படுகிறது. அதாவது கடந்த ஓராண்டில் 60 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளதை காட்டுகிறது.
அட்சய திருதியை நாளில் விலை இதைவிட மேலும் உயருமா? குறையுமா? என்ற எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள் காத்திருக்கிறார்கள்.