தமிழக செய்திகள்

தலித் என்பதால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ்... சிபிசிஐடி அதிர்ச்சி தகவல் - கைது செய்யப்படாத காவல் குற்றவாளிகள்!

சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகள் இவர்கள்தான் எனக்கூறிய பிறகும் கைது செய்யப்படாத ஆதிக்க சமூகத்தினர்.

திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு, தவெக ஆட்சியில் தகனம் செய்யப்பட்டது சிவகங்கை மாவட்டம், மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனின் உடல். காவல்துறை மரணம் என்றபோதும், கைது செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்த அரசும் சரி, உடல் தகனம் செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்த, தற்போது இருக்கும் அரசும் சரி இந்த சம்பவம் தொடர்பாக வாய் திறக்கவில்லை.

பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்படாமலேயே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகாஷ் டெலிசனின் மரணத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஆகாஷ் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் (தேவேந்திர குல வேளாளர்) என்பதாலேயே அடித்துக் கொல்லப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

முழுவிவரம் என்ன காண்போம்.

குற்ற வழக்கில் மார்ச் மாதம் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி நள்ளிரவில் ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (35), ஆதனூரைச் சேர்ந்த அழகர் (33) ஆகியோர் தாக்கப்பட்டனர்.

இவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (24) மற்றும் கோபி என இருவரை போலீசார் கைது செய்தனர்.

கைதின்போது தப்பி செல்ல முயன்ற ஆகாஷ் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார், இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 8-ஆம் தேதி அதிகாலை ஆகாஷ் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் ஆகாஷை அடித்தே கொன்றதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைதுசெய்யக்கோரி ஆகாஷின் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வழக்கு பூதாகரமாக,

ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன், சிவகங்கை நகர் தலைமைக் காவலர் தெய்வேந்திரன், சிப்காட் தலைமைக் காவலர் சரத்குமார், மானாமதுரை முதல் நிலை காவலர் காளீஸ்வரன், திருப்புவனம் முதல் நிலை காவலர் மனோகரன் ஆகிய 6 காவலர்களை கடந்த மார்ச் 13ஆம் தேதி இடைநீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டார்.

சிபிசிஐடிக்கு மாற்றம்

இதனிடையே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆகாஷின் தந்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகாஷ் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும்படி உத்தரவிட்டது.

இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆகாஷ் குடும்பத்தின் போராட்டம் தொடர்ந்தது. இதனால் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆனபின்னும் ஆகாஷின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

உடல் தகனம்

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், ஆகாஷின் உடலை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போலீசார் கைது செய்யப்படாததால் உடலை பெற்றோர் வாங்கவில்லை. இதனால் முறைப்படி ஆகாஷின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி, அவரது உடலை காவல்துறையே தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து ஜூன்.17ம் தேதி ஆகாஷின் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சிபிசிஐடி அறிக்கை தாக்கல்

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகாஷ் டெலிசன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரை கொல்ல திட்டமிட்டு இந்த கொலை நிகழ்ந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு காவலர்களும் ஆதிச்ச சாதியை சேர்ந்தவர்கள் என்றும், ஆகாஷ் தலித் என்பதை அறிந்தே அவரை ஆள் நடமாட்டம் இல்லாத யூகலிப்டஸ் காடு பகுதிக்கு அழைத்துச் சென்று ஈரசாக்கை வலது காலில் கட்டி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட, ஃபேட் எம்பாலிசம் என்ற பக்களவிளைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

இதுவரை கைது செய்யப்படாத குற்றவாளிகள்

இதில் முக்கிய குற்றவாளி ஆய்வாளர் திலீபன் உட்பட ஆறுபேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகாஷின் மரண வாக்குமூலத்தின் இந்த அனைத்து சம்பவங்களும் கூறப்பட்டநிலையில், தற்போதுவரை குற்றவாளிகள் ஆறுபேரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக 16 பேர்மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர்மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகாஷ் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.