சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து முக்கியமானதாக மாறி உள்ளது. தற்போது பரங்கிமலை - சென்னை சென்ட்ரல், விமானநிலையம் - விம்கோநகர் ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2-ம் கட்டமாக மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
ஏற்கனவே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரஇருக்கிறது.
இதற்கிடையே சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ரூ.9 ஆயிரத்து 335 கோடி செலவில் 13 உயர்மட்ட ரெயில்நிலையங்களுடன் அமைய இருக்கிறது.
இந்த வழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் மெட்ரோ நிலையங்கள் உயர்மட்ட பாதையில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திருத்தப்பட்ட திட்ட அறிக்கை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு சமர்ப்பித்து 11 மாதங்கள் ஆனபோதிலும் இன்னும் ஆரம்ப கட்ட ஆய்விலேயே உள்ளது. இதனால் விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டம் தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். விமானநிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்தை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் 12 -ந்தேதி விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் மத்திய அமைச்சகம் கூடுதல் ஆவணங்களையோ அல்லது விளக்கங்களையோ இதுவரை கேட்கவில்லை என்றார்.