தமிழக செய்திகள்

வீடு வீடாக உணவு பொருட்களை வினியோகிக்கும் ஊழியர்களுக்கு குளிர்சாதன ஓய்வறை

இருசக்கர வாகனத்தில் சுற்றி வரும் இவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் அந்த நேரத்தில் செல்போன்களுக்கு சார்ஜர் ஏற்றிக் கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

தற்காலிக தொழிலாளர்களின் நலனுக்காக சென்னை மாநகராட்சி குளிர்சாதன ஓய்வறைகள் அமைக்கிறது. இவை 10 பேருக்கு ஒரே நேரத்தில் ஓய்வு எடுக்க வசதியாக இருக்கும். மேலும், 6 பஸ் நிறுத்தங்களில் நவீன நிழற் கூடங்கள் அமைக்கப்பட்டு, பெண்களின் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்படுகின்றன.

சென்னையில் வெயில், மழை என்று பாராமல் இரவு, பகலாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு வழங்கும் பணியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேலைவாய்ப்பு இல்லாத இவர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஆன்லைன் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு பணி செய்கின்றனர். ஓட்டல் உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்தையும் தங்களது இருசக்கர வாகனத்தின் மூலமே கொண்டு வந்து வீடுகளுக்கு கொடுக்கிறார்கள்.

ஓய்வு அறை

இந்தப் பணியில் ஈடுபடும் ஆண்- பெண் ஊழியர்களுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. குளிர்சாதன வசதியுடன் ஓய்வறை அமைக்கிறது. ஏற்கனவே அண்ணா நகரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இந்தப் பணியாளர்களுக்கு ஓய்வு அறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஓய்வறையில் அவர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கவும், கழிவறை, குடிநீர் வசதி, செல்போன் சார்ஜர் வசதி போன்றவை அளிக்கப்படுகிறது.

இருசக்கர வாகனத்தில் சுற்றி வரும் இவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் அந்த நேரத்தில் செல்போன்களுக்கு சார்ஜர் ஏற்றிக் கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய் அறிவுறுத்தலின்படி ஒரு கோடியே 45 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 4 வளர்ச்சிப் பணிகளுக்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டது.

35-வது வார்டில் ரெட்டைமலை சீனிவாசன் தெரு சாலை புதுப்பித்தல், மேற்கு நிழல் சாலை புதுப்பித்தல், உதயசூரியன் நகர் மாநகராட்சி பள்ளி வகுப்பறை கூடுதல் கட்டிடம் போன்ற பணிகள் இதில் அடங்குகிறது.

நவீன நிழற் கூடங்கள்

இதுகுறித்து பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான சிவா கூறியதாவது:-

தற்காலிக தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் குளிர்சாதன ஓய்வறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 20 நாட்களில் இது பயன்பாட்டிற்கு வரும். இதில் ஒரே நேரத்தில் 10 பேர் வரை அமர்ந்து ஓய்வெடுக்கலாம் அதற்கான இருக்கைகள் போடப்படுகிறது.

இந்த கண்டெய்னர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 6 பஸ் நிறுத்தங்களில் நவீன நிழற் கூடங்கள் அமைக்கப்படுகிறது. பார்வதி நகர், சர்மா நகர், முல்லை நகர், அசோக் பில்லர், எருக்கஞ்சேரி, எம் ஆர் நகர் ஆகிய இடங்களில் நவீன நிழற் கூடங்கள் அமைகிறது.

இதில் சி.சி.டி.வி.கேமரா பொருத்தப்படுகிறது. பெண்கள் பாதுகாப்புக்கு அவசரகால அழைப்பு பொத்தான் அமைக்கப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிழல் கூடம் ஏசி வசதி இல்லாதது. நவீன தொழில்நுட்பத்தில் இந்த 6 பஸ் நிறுத்தங்களும் அமைய உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT