தமிழக செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் அதிமுக உட்கட்சி பூசல் - எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் அதிருப்தி அணியினர் 3 நாட்களாக ஆலோசனை!

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

தமிழ்நாடு இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியில் மீண்டும் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

எதிர்பாரா தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அதிமுகவுடன், தவெக கூட்டணி வைக்க முயன்று வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அக்கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இதனைத்தொடர்ந்து தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவையும் விமர்சனம் செய்யத் தொடங்கினார் தற்போதைய முதலமைச்சர் விஜய்.

இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஜயை தாக்கிப் பேச ஆரம்பித்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்துக் கட்சிகளுமே எதிர்பாரா முடிவுகள் வெளியாகின. தவெக ஆட்சியை பிடித்தது, திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது; அதிமுக முதல்முறையாக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இது இபிஎஸ்க்கு பெரும் இடியாக அமைந்தது. அதிமுக எதிர்பாராத தோல்வியை சந்திக்க 2022க்கு பிறகு, மீண்டும் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம் என முக்கிய நிர்வாகிகள் குற்றம் சாட்டத் தொடங்கினர். சிலர் கட்சியில் இருந்து விலகி ஆட்சியை பிடித்த தவெக பக்கம் சென்றனர்.

தலைமையான இபிஎஸ்-இன் பேச்சை மீறி தவெகமீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்திற்கும் வாக்களித்தனர். இதனால் வாக்களித்த 25 சட்டமன்ற உறுப்பினர்களில் முக்கியமான நிர்வாகிகளின் பதவியை இபிஎஸ் பறித்தார்.

இது கட்சிக்குள் இன்னும் சலசலப்பை ஏற்படுத்த, எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வந்தான், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஒரு அணியாக திரண்டனர்.

இந்த அணியின் தலைமையின்கீழ் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றனர். பின்னர் நாட்கள் செல்ல செல்ல பிரச்னையின் தீவிரம் கொஞ்சம் குறைந்தது. அதனைத்தொடர்ந்து இபிஎஸ் மீண்டும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு பதவி வழங்கினார்.

ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதன்பின் நடந்த கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை.

இடைத்தேர்தலிலும் தோல்வி

இச்சூழலில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. இந்த இரண்டு தொகுதிகளுமே அதிமுக கோட்டையாக இருந்தது. இடைத்தேர்தலையொட்டி அதிமுக தரப்பில் இருந்து இபிஎஸ் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டார். மற்ற முக்கிய நிர்வாகிகள் யாரும் பெரிதாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டது போன்று தெரியவில்லை.

இபிஎஸ்க்கு முற்றும் நெருக்கடி

இச்சூழலில் இடைத்தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்துள்ளதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியினர் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்த கடந்த மூன்று நாட்களாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் அதிருப்தி அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே தொடர் தோல்விகளுக்குக் காரணம் என அதிருப்தி குழுவினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் அடுத்ததாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள கட்சியில் பெரிய அளவிலான தலைமை மாற்றம் அல்லது ஒருங்கிணைப்பு தேவை என்ற கோரிக்கையை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT