மதுரை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு மூடியதைப் பார்த்தோம். மக்களுக்குத் தேவையான திட்டங்களை அதே பெயரில் தற்போதைய முதலமைச்சர் மீண்டும் செயல்படுத்தி வருகிறார். இந்த ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கின்றனர். மீண்டும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்.
எனக்கும் அ.தி.மு.க.வினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.15 கோடி வாங்கிக் கொள்ளுங்கள் என்றும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வரும்போது அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கட்சித் தலைமையிடம் உடனடியாக நான் புகார் அளித்துள்ளேன். செந்தில் பாலாஜி மீதான வழக்குப் பதிவு தொடர்பான விவகாரத்தில் தற்போது மீண்டும் அ.தி.மு.க.வினர் செயல்படுகின்றனர்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் எனக்குத் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இணைந்துதான் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றன.
ரூ.100 கோடி கொடுத்தாலும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறமாட்டார்கள். இதுகுறித்து கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் யார் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது வெளிவரும்.
ஏற்கனவே 35 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் தி.மு.க. தேர்தல் களத்தில் நின்றது. அ.தி.மு.க. பக்கம் யாரும் வரவில்லை. எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் மக்களுடன் கூட்டணி வைத்து தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 34 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
தற்போது மக்கள் வரவேற்பும், எழுச்சியும் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கித் திரும்பியுள்ளது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிக வாக்கு விழுக்காடு பெற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.