தமிழக செய்திகள்

அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கௌதமி!

இபிஎஸ்-க்கு கணத்த இதயத்துடன் கௌதமி எழுதிய கடிதம்!

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பிரபல திரைப்பட நடிகை கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, "தற்போது உள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும், நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையிலும், கணத்த இதயத்துடன் என்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று முதல் விடுவித்துக் கொள்கிறேன்" என்று கௌதமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுகவில் இணைந்த நாள் முதல் இன்று வரை தனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, வட்ட, பகுதி, ஒன்றிய, பேரூர் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் மனதார வணங்கி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இக்கடிதத்தில் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, நடிகை கௌதமி கடந்த 1997 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினர்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் தீவிரமாகப் பணியாற்றிய அவர், அக்டோபர் 23, 2023 அன்று கௌதமி பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார்.

பாஜகவில் இருந்து விலகிய சில மாதங்களிலேயே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 14, 2024 அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கௌதமி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே, அவரது அரசியல் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 2024-ல் அவருக்குக் கட்சியின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.