தமிழக செய்திகள்

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

அறிவிக்கப்படாத மின் வெட்டை சரிசெய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தவெக அரசை கண்டித்து விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கூட்டுறவு பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும், மாநிலம் முழுவதும் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டை சரிசெய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் '5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்' என்று வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், “கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000/-த்திற்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும்; 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்" என்றும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது த.வெ.க. அரசு.

மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை த.வெ.க. அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை த.வெ.க. அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.

இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 19.6.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. இரா. பசுபதி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில்

பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயப் பெருங்குடி மக்கள் நலனையும், பொதுமக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.