80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்களை 80களில் வெளியான ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அணிந்திருப்பது போன்ற ஸ்டைலான உடைகளுடன் உருவாக்கி வருகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வயது வித்தியாசமின்றி பலரும் மூழ்கி கிடப்பதையும் காண முடிகிறது.
இப்படி முகநூலில் பல்வேறு விஷயங்கள் புகைப்படங்களோடு டிரெண்டிங் ஆவது வழக்கம். இதற்கு முன்பு ஜிப்லி புகைப்படங்கள் கார்ட்டூன் வடிவில் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது 80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்களை 80களில் வெளியான ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அணிந்திருப்பது போன்ற ஸ்டைலான உடைகளுடன் உருவாக்கி வருகின்றனர். அனைத்து தரப்பினரும் தங்களது இளம்வயது புகைப்படங்கள் ஏ.ஐ. மூலமாக உருவாக்கி தங்களது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை பெற்று வருகிறார்கள்.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சதீஷ் முதலமைச்சர் விஜய்யுடன் இருப்பது போன்ற இளம்வயது தோற்றத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப சமூக வலைதள பக்கத்தில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் இளம் வயது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் புல்லட்டில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு 80 டிரெண்டிங் என்று பதிவிட்டுள்ளனர்.
இதே போன்று நடிகர்-நடிகைகள் பலரும், அரசியல் பிரமுகர்களும் ஏ.ஐ. புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.