மழை, பனி, குளிர் ஆகிய மூன்றின் அடையாளமாக இருந்த ஊட்டி முற்றிலும் மாறுபட்ட முகத்தை காட்டுகிறது. “சூடான காபியும், குளிர்ந்த காலையும்” என்பதற்கு பெயர் பெற்ற இந்த மலை நகரம் தற்போது கடும் வெயிலின் தாக்கத்தில் வாடுகிறது.
இந்த நிலையில் ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் காணாத வெப்பநிலை உயர்வு பதிவாகி, உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஊட்டியில் நேற்று 27.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. சமவெளி பகுதிகளுடன் ஒப்பிடும்போது இது சாதாரணமாக தோன்றலாம். ஆனால், வழக்கமாக 18-20 டிகிரிக்குள் நீடிக்கும் ஊட்டியின் காலநிலைக்கு இது கடும் வெப்பமாகவே கருதப்படுகிறது.
கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந் தேதி ஊட்டியில் 29.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதன்பிறகு இதுதான் இதுவரை அதிகபட்சம். அதிலும் குறிப்பாக மதிய வெயில் ‘மலை நகரத்தையும்’ புழுங்க வைக்கிறது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் 12 மணிக்கு பிறகு வெப்பம் உச்சத்தை எட்டுகிறது. இதனால் ஊட்டியின் இதமான குளிரை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள், மரநிழல், ஓட்டல் விடுதிகளில் தஞ்சம் தேடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குளிர்ச்சியான காலநிலையால் தண்ணீர் தேவை குறைவாக இருந்த ஊட்டியில், தற்போது குடிநீர் தேவை கணிசமாக உயர்ந்து உள்ளது. வனச்சூழல் குறைவு, நகரமயமாக்கல் அதிகரிப்பு, உலகளாவிய வானிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை ஊட்டியின் இயல்பான காலநிலையை மாற்றி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஊட்டியில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் மீது கூடுதல் கவனம் தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், ஊட்டியில் நிலவி வரும் வெப்பநிலை தற்காலிகமா? அல்லது காலநிலை மாற்றத்தின் நீண்டகால அறிகுறியா? என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.