நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. பருவமழை காலங்களில் மகாலட்சுமி நகர், அமுதம் காலனி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நகர், உதயசூரியன் நகர், மீனாட்சி நகர், அருள் நகர், பிரியா நகர் ஆகிய பகுதிகளில் பெரிய அளவு மழை வெள்ள பாதிப்பு ஏற்படும்.
இதைத்தொடர்ந்து வெள்ளபாதிப்பை தடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள கால்வாய்கள் வடிகால் வகைகள் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜி.எஸ்.டி.சாலையை ஒட்டி செல்லும் அடையாறு ஆற்று பெரிய கால்வாய் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் இருந்து ஆதனூர், மண்ணிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் சேர்கிறது. இதன் தொடக்கமான மகாலட்சுமி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பருவ மழையின் போது தண்ணீர் தேங்கி பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதைத்தொடர்ந்து அடையாறு ஆற்றில் ஆகாய தாமரையை அகற்றி தூர் வாரும் பணிகளும் நடந்து வருகிறது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி மண்டல இயக்குனர் மாரிச்செல்வி. உதவி பொறியாளர் சிவ கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நகர மன்ற தலைவர் ஜி.கே. லோகநாதன், நகராட்சி ஆணையர் (பொ) லதா, நகராட்சி பொறியாளர் கோவிந்த ராஜன் ஆகியோர் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு மேற்கண்டனர்.
ஜி.எஸ்.டி.சாலையோரம் உள்ள அடுக்குமாடி குடியிருப்ைப ஒட்டி அடையாறு ஆற்றை இணைக்கும் அப்பகுதியில் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் லதா கூறும்போது, நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் கால்வாய், வடி கால்வாய், தூர்வாரப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் எந்த வெள்ள பாதிப்பும் ஏற்படாத வகையில் நகராட்சி நிர்வாகம் பணிகளை செய்து வருகிறது. பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்றார்.