தமிழக செய்திகள்

சி.வி.சண்முகம் வீட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று மீண்டும் ஆலோசனை

மொத்தமுள்ள 41 எம்.எல்.ஏ.க்களில் 26 பேர் இருந்தாலே நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என சட்டசபையில் அதிருப்தி அணியினர் உரிமை கோர முடியும்.

அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சண்முகம் வீட்டில் மீண்டும் ஆலோசனை நடத்தினர். தேர்தலில் தொடர்ந்து தோல்வி அடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி கோஷ்டி வியூகம் அமைத்து செயல்படுகின்றனர். இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உரிமை கோர முடியும்

தேர்தலில் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அதிருப்தி கோஷ்டியினர் அணி திரண்டு வருகின்றனர்.

மேலும் இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள, அதிருப்தி அணியினர் வியூகம் அமைத்து வருகின்றனர்.

அதன்படி சமீபத்தில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி இல்லத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை செய்தனர்.

மொத்தமுள்ள 41 எம்.எல்.ஏ.க்களில் 26 பேர் இருந்தாலே நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என சட்டசபையில் அதிருப்தி அணியினர் உரிமை கோர முடியும். இதையடுத்து அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

ஆலோசனை

இதற்காக தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் ஆதரவு கடிதம் பெறும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள். இதற்காக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டிற்கு 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்து இருந்தனர். அவர்கள் ஒன்று கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT