தமிழக செய்திகள்

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா - 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ராஜினாமாவை சபாநாயகரும் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

அதிமுக எம்எல்ஏக்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் நேற்று ராஜினாமா செய்த நிலையில் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக சட்டசபை செயலக கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு காலியாக உள்ளது.

2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது.

ஆளுங்கட்சியாக இருந்த திமுக 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும் என கருத்துக்கணிப்பு கூறிய நிலையில், அந்த கருத்துக்கணிப்பு அப்படியே தலைகீழாக மாறிப்போனது.

த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. 2-ம் இடமும், அ.தி.மு.க. 3-ம் இடமும் பிடித்தன. த.வெ.க. 108 இடங்களை பெற்று இருந்தபோதிலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு த.வெ.க. ஆட்சி அமைத்தது. தேர்தல் முடிவு வெளியான பிறகு முதல் திருப்பமாக இது இருந்தது.

அடுத்ததாக சட்டசபையில் த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தபோது அ.தி.மு.க. தரப்பில் வெற்றி பெற்று இருந்த 47 எம்.எல்.ஏ.க்களில் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து அடுத்த திருப்பத்தை ஏற்படுத்தினார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்த 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்து இருந்தனர். இதனால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி சார்ந்த நடவடிக்கைகளை கையில் எடுத்தார். இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார்கள்.

இப்படி பரபரப்பான சூழல் தொற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிட்டு 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சத்தியபாமா, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் போட்டியிட்டு 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்த மரகதம் குமரவேல், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போட்டியிட்டு 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் நேற்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இவர்கள் 3 பேரும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ராஜினாமாவை சபாநாயகரும் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

ராஜினாமா கடிதம் வழங்கிய கையோடு, அந்த 3 பேரும் தெலைமைச்செயலக வளாகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.