சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் த.வெ.க. வில் இணைந்து வருகின்றனர்.
பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அலுவலகங்களில் தினந்தோறும் ஏராளமானோர் த.வெ.க.வில் இணைவதற்கு திரண்டு வருகின்றனர்.
அதிலும் அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் அதிக எண்ணிக்கையில் இணைந்து வருகின்றனர். கட்சியில் சேருவதற்காக கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.வும் முன்னாள் டி.ஜி.பி.யுமான நட்ராஜ் த.வெ.க.வில் இணைந்தனர்.
அ.தி.மு.க.வில் இருந்து அணி அணியாக த.வெ.க. வில் பலர் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது மட்டுமின்றி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், பி.சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.சி.சம்பத், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலை ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து வருவது அ.தி.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த பிரமாண்ட இணைப்பு விழாவில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஒரே நேரத்தில் கூண்டோடு விலகி த.வெ.க.வில் இணைந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விரைவில் அடுத்தக்கட்ட இணைப்பு விழா அடுத்த வாரம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.