சென்னை ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் கூறி, இது சம்பந்தமாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என ராயபுரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில், 39 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் என சொத்து மதிப்பை குறிப்பிட்டிருந்த நிலையில்,
2026-ம் ஆண்டு வேட்புமனுவில், 70 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் என ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதுகுறித்த விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல, விழுப்புரம் மாவட்டம் மைலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறப்பட்டு உள்ள சொத்து விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிடக் கோரி தொகுதி வாக்காளர் செந்தில்குமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 2021-ல் அசையும் சொத்துக்கள் ரூ.12 லட்சத்து 8 ஆயிரத்து 409 ஆகவும், அது தற்போது ரூ.60 லட்சத்து 64 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது. 5 ஆண்டு கால எம்.எல்.ஏ. வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பின் அளவு அபரிமிதமாக இருக்கும் நிலையில், அதற்கான ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 780 என 2021-ல் குறிப்பிட்டிருந்த நிலையில் சொத்துக்களின் அதிகரிப்பு விகிதம் என்பது நியாயப்படுத்தக்கூடிய வகையில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோருக்கு எதிரான இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.