அதிமுக தலைமை கழகம் 
தமிழக செய்திகள்

செப்.6-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை அலுவலகம் அறிவிப்பு

கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டம் வருகிற 6-ந்தேதி நடைபெற இருப்பதாக கட்சித் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

தொடர் தோல்வியால் அதிருப்தி

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்து வந்துள்ளது. இதனால், அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி பல முக்கிய நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதே நேரத்தில், அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது குறித்து அதிருப்தி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

பொதுக்குழு தொடர்பாக...

ஆனால், அவர்களை புறந்தள்ளி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை புதிய ரத்தம் பாய்ச்சி வலுவாக்குவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் புதிய மாவட்டச் செயலாளர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி தலைமையின் வழிகாட்டுதல்களை, கட்சி பொதுச்செயலாளர் எடுக்கும் முக்கிய முடிவுகள் மற்றும் கட்டளைகளை மாவட்டச் செயலாளர்கள் மூலமாக கீழ்மட்டத் தொண்டர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ளார்.

இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அறிவிப்பு

மாவட்ட செயலாளர் கூட்டம் குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.