அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது, பா.ஜ.க., பா.ம.க. (அன்புமணி), த.மா.கா.. அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இரு கட்சிகளும் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
இரு கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை சென்னை வர உள்ளதாகவும் இ.பி.எஸ். - பியூஷ் கோயல் இணைந்து தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது பா.ஜ.க. குறைந்தபட்சம் 29 தொகுதிகளுக்கு குறையாமல் ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளது. குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர், தியாகராயநகர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளை பா.ஜ.க. கேட்டுள்ளதாக தெரிகிறது.