அ.தி.மு.க. 55-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உற்சாகமாக நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி, கட்சி கொடியேற்றி விழாவை சிறப்பித்தார்.
அ.தி.மு.க. 55-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு அ.தி.மு.க. பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை, ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
வருங்கால முதல்வரே வாழ்க, பொதுச்செயலாளரே வாழ்க, தொண்டர்களின் பாதுகாவலரே வாழ்க என்பது போன்ற கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினார்கள். அதன்பின்னர் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை கழகத்தில் உள்ள அ.தி.மு.க. கொடியேற்றி வைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த விழாவில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், வளர்மதி, காமராஜ், கோகுல இந்திரா, அக்ரிகிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. தலைமைக் கழகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த பிறகு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை பார்த்து இரட்டை விரலைக் காட்டி கையசைத்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த அதிமுகவினர் எடப்பாடியார் வாழ்க என உற்சாக குரல் எழுப்பினார்கள்.
பின்னர் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு மலரை வெளியிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு ஆண்டு விழா நடைபெற்ற போதிலும் அதிமுக தலைமை கழகத்தில் ஏராளமான தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர்.
அதே நேரத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது குறிப்பிடப்பட்டது.