முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தமிழ்நாட்டின் ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை’யின் பெயரை ‘சமூக நீதித் துறை’ என மாற்றி அரசாணை வெளியிட்டது.
இந்த பெயர் மாற்றம் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சியில் நடைபெற்ற விசிக மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,
“தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரைச் சமூக நீதித்துறை என்று மாற்றிவிட்டார்கள். இந்த நடவடிக்கை எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
ஆதிதிராவிடர் என்பது ஒரு சாதிப் பெயர் கிடையாது. அது சாதி ஒழிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுப் பெயர். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பெருமைமிகு பெயர். நாங்கள் அந்தப் பெயரை மட்டுமே பயன்படுத்தியிருந்தால், இந்தச் சாதிப் பெயர்களே காலப்போக்கில் மறந்திருக்கும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று அந்தப் பெயரைச் சுருக்கி, ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பெயர் போல மாற்றிவிட்டார்கள். நாங்கள் பொருட்படுத்தவில்லை. சாதி பெயரை மாற்ற வேண்டும் என்று அவர்களே மாற்றிவிட்டார்கள். 'சமூக நீதி துறை' என்ற பெயர் எங்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது’ என்று கூறினார்.
அமைச்சர் வன்னி அரசுவின் கோரிக்கையால்தான் பெயர் மாற்றப்பட்டது என்று பரவி வரும் வதந்திகளுக்குத் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்தார்.
“அரசு தரப்பிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை முற்றிலும் வேறானது. ‘நாங்கள் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு எப்போதும் ஆதிதிராவிடர் நலத்துறையைத்தான் தர வேண்டுமா? ஏன் வேறொரு பொதுத் துறையைத் தரக்கூடாது?’ என்று மட்டும்தான் அவர் கேள்வி எழுப்பினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தலித் கட்சி மட்டுமல்ல, அது அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடும் இயக்கம் என்பதை உணர்த்தவே அவர் பொதுவான வேறொரு துறையைக் கேட்டார். ஆனால், வன்னி அரசு சொல்லித்தான் துறையின் பெயர் மாற்றப்பட்டதாக ஒரு தவறான கருத்து பரப்பப்படுகிறது” என விளக்கமளித்தார்.
7 சமூகம் ஒன்றாக சேர்ந்து அருந்ததியர் என்று வாங்கினார்கள், தேவேந்திர குல வேளாளர்கள் அவர்களும் தங்களது சாதி பெயரை மாற்றி அரசாணையை வாங்கிகொண்டார்கள். மற்ற சாதிகள் அனைத்தும் என்னவாக இருந்தாலும் எஸ்சி பட்டியலில் சிலருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.
இறுதியாக விசிக-வின் இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்த திருமாவளவன், “அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ அல்லது வன்னி அரசு சொல்லி மாற்றப்பட்டது அல்ல". விசிக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்றால், தமிழ்நாடு அரசு இந்தத் துறையின் பெயரை மீண்டும் பழையபடி ‘ஆதிதிராவிடர் நலத்துறை’ என்றே மாற்ற வேண்டும். இதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று அழுத்தமாகக் கூறினார்.