தமிழக செய்திகள்

சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

கோவை வடக்கு மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நிற்காது. கோவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சோரனூர் செல்லும் பயணிகள் ரெயிலும் போத்தனூர்-கோவை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம் மங்களூரு சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16159) இருகூர் மற்றும் போத்தனூர் வழியே இயக்கப்படும். மேலும் கோவை வடக்கு மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நிற்காது. பயணிகளின் வசதிக்காக கூடுதலாக நிறுத்தமாக போத்தனூரில் நிறுத்தப்படும். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வைஷ்னோ தேவி கட்ராவில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் இம்சாகர் எக்ஸ்பிரஸ் ரெயில்(16318) வருகிற 10-ந்தேதி வரை இருகூர் மற்றும் போத்தனூர் வழியே இயக்கப்படும். மேலும் கோவை நிறுத்தத்தில் நிற்காது.

பயணிகளின் வசதிக்காக கூடுதலாக நிறுத்தமாக போத்தனூரில் நிறுத்தப்படும். கேரள மாநிலம் சோரனூரில் இருந்து வருகிற 7 மற்றும் 10-ந் தேதிகளில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் பயணிகள் ரெயில் போத்தனூர்-கோவை இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, அதே தேதிகளில் கோவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சோரனூர் செல்லும் பயணிகள் ரெயிலும் போத்தனூர்-கோவை இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.