தமிழக செய்திகள்

சென்னை-திருவனந்தபுரம், ஈரோடு, திருப்பதி செல்லும் 6 விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோடைகால விடுமுறையை முன்னிட்டு, இந்த கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுவதன் மூலம், பயணிகளின் நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

சென்னை:

தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான விரைவு ரெயில்களில் நெரிசலை குறைக்கும் விதமாக, சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதுதவிர, வழக்கமான ரெயில்களில் பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்ய வசதியாக, கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுகிறது. அந்த வகையில், 6 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் ஏசி அதிவிரைவு ரெயிலில் (22207) மார்ச் 31-ந் தேதி முதல் மே 5-ந்தேதி வரை 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. மறு மார்க்கத்தில், இந்த ஏ,சி. அதிவிரைவு ரெயிலில் (22208) ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் -திருப்பதிக்கு இடையே இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரெயிலில் (16053-16054) கூடுதலாக ஒரு இருக்கை வசதி கொண்ட (சேர்கார்) பெட்டி மார்ச் 30-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு இடையே இயக்கப்படும் விரைவு ரெயிலில் (16057-16058) மார்ச் 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை ஒரு இருக்கை வசதி கொண்ட (சேர்கார்) பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

ஈரோடுக்கு இயக்கப்படும் ஏற்காடு அதிவிரைவு ரெயிலில் (22649) ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 4-ந் தேதி வரை ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். மறுமார்க்கத்தில், இந்த விரைவு ரெயிலில் (22650), மார்ச் 29-ந் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஒரு பெட்டி கூடுதலாக சேர்க்கப்படும்.

இதுதவிர, சென்னை சென்ட்ரல் - சார்லபள்ளி இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரெயிலில் ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியும், ராமேசுவரம் - மங்களூரு சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரெயிலில் 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டியும் சேர்க்கப்படும்.

கோடைகால விடுமுறையை முன்னிட்டு, இந்த கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுவதன் மூலம், பயணிகளின் நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.