ஆதவ் அர்ஜூனா
தமிழக செய்திகள்

2600 விடுதி விளையாட்டு வீரர்களின் உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ. 12.67 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஆதவ் அர்ஜூனா

2600 விடுதி விளையாட்டு வீரர்களின் உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ.12.67 கோடி கூடுதலாக உயர்த்தி, செலவினத் தொகை ரூ.31.72 கோடியிலிருந்து ரூ.44.39 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி, சிறப்பு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சிபெற்று வரும் 2,600 மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கவும், அவர்களது திறன் மேம்படுவதற்கு தினசரி உணவுப்படி, சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

1. தினசரி உணவுப்படி உயர்த்தி வழங்குதல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி, சிறப்பு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் 2,600 மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பட ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதற்கு உணவுப்படி தொகையினை நாளொன்றுக்கு தலா ரூ.350/- லிருந்து ரூ.450/-ஆக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதற்கான செலவினத் தொகை ரூ.29.12 கோடியிலிருந்து ரூ.37.44 கோடியாக உயர்த்தியதன் மூலம், ரூ.8.32 கோடி கூடுதலாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

2. சீருடைகளுக்கான தொகை உயர்த்தி வழங்குதல்

தினசரி பயன்பாட்டிற்கும், சுகாதாரமான முறையில் விளையாடும் வகையில் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளுக்கான தொகை ரூ.6,000/-த்திலிருந்து, ரூ.15,000/-ஆகவும், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளுக்கான தொகை ரூ.10,000/- நிதிலிருந்து ரூ.25,000/- ஆகவும் உயர்த்தி, இதற்கான செலவினத் தொகை ரூ.1.70 கோடியிலிருந்து ரூ.4.25 கோடியாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.2.55 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. விளையாட்டு உபகரணங்களுக்கான தொகை உயர்த்தி வழங்குதல்

தனிநபர் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பிரத்யேக பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு தொகை ரூ.2,000/-த்திலிருந்து, ரூ.10,000/- ஆக உயர்த்தி இதற்கான செலவினத் தொகை ரூ.80 லட்சத்திலிருந்து ரூ.2.60 கோடியாக உயர்த்தப்ட்டுள்ளது. இதற்கான ரூ.1.80 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2600 விடுதி விளையாட்டு வீரர்களின் உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ.12.67 கோடி கூடுதலாக உயர்த்தி, செலவினத் தொகை ரூ.31.72 கோடியிலிருந்து ரூ.44.39 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT