தமிழக செய்திகள்

TN Assembly Election| பத்து பைசா தேறாத தே.மு.தி.க.வுக்கு 10 சீட்- நடிகை விந்தியா

ஒரு நிமிடம் தலை நிமிர்ந்து மக்கள் யோசித்தால் தி.மு.க.வே காலியாகிவிடும்.

பிரசார களத்தில் எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்து கலாய்ப்பதில் நடிகை விந்தியா கில்லாடி. அந்த வகையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி. கந்தனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-

பொதுவாக 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சி மீது மக்களுக்கு தான் வெறுப்பு ஏற்படும். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினரே வெறுத்துப் போய் இருக்கிறார்கள். எம்.எல்.ஏக்களாக இருக்கும் 13 பேருக்கு சீட் கொடுக்கவில்லை.

ஆனால் அ.தி.மு.கவில் இருந்து சென்ற 19 பேருக்கு சீட் கொடுத்து இருக்கிறார்கள். 2 மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் போய் சேர்ந்த 5 பேருக்கும் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். ஏனெனில் அங்கு போட்டியிட தகுதியான ஆட்கள் இல்லை. பேட்டரியில் ஒரு பக்கம் பிளஸ் இருக்கும் இன்னொரு பக்கம் மைனஸ் இருக்கும். ஆனால் தி.மு.க.வுக்கு மைனஸ் மட்டும் தான் உண்டு. இதுதான் கருணாநிதி குடும்பத்திற்கு கிடைத்த பிளஸ்.

தி.மு.க.வுக்கும் அ.தி.மு.கவுக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம். அந்த ஒற்றை எழுத்து ‘அ’வில் தான் அன்பு, அரவணைப்பு, அக்கறை, அங்கீகாரம் எல்லாம் அடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று எப்ப பார்த்தாலும் பேசி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் சட்டம் ஒழுங்கு, பாலியல் கொடுமைகள் எல்லாவற்றிலும் கடந்த 5 வருடமாக தமிழகம் தலைகுனிந்து தான் நிற்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் கொடுமை செய்த அந்த சார் யார்? என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பசிக்கு சோறு இல்லாவிட்டாலும் தண்ணீரை குடித்து பசி ஆறுவார்கள். அப்படிப்பட்ட குடிநீர் தொட்டியில் வேங்கை வயலில் அசிங்கத்தை கலந்தார்கள். அதை கண்டு பிடிக்க இவர்களுக்கு துப்பில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி. நாட்டுக்காக உழைத்து உயிர் துறந்தவர்களுக்கு ரூ. 3 லட்சம் உதவி.

இதுதான் தமிழகத்தை தலை நிமிர வைத்திருக்கும் லட்சணம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். ஆனால் குரூப் 2 தேர்வை 3 முறை ரத்து செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

10 வயது பசங்க கஞ்சா போதையில் அலைகிறார்கள். ஒரு நிமிடம் தலை நிமிர்ந்து மக்கள் யோசித்தால் தி.மு.க.வே காலியாகிவிடும். பொதுவாக தேர்தல் நேரத்தில் கட்சிகள் கூட்டணி அமைக்கும். அவ்வாறு அமைக்கப்படும் கூட்டணிகள் எதிர்க்கட்சிகளை தான் விமர்சிக்கும். ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளே ஒன்றை ஒன்று எதிர்கின்றன. தி.மு.க.வை எதிர்த்து திருமாவளவன், திருமாவளவனை எதிர்த்து காங்கிரஸ். இது கூட்டணியா? பாண்டிச்சேரியில் தான் இப்படி கூட்டணி தள்ளாடுகிறது என்று பார்த்தால் தமிழ்நாட்டிலும் தள்ளாடுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கே சீட் இல்லை என்று ஏமாற்றுகிறார் ஸ்டாலின். அதை கேட்டால் பா.ஜனதா வந்து விடும்... திருப்பரங்குன்றம்... திருவண்ணாமலை... என்று சம்பந்தமில்லாமல் எதையெதையோ பேசி சீட்டுக் கொடுக்காமல் ஆக்கி விடுகிறார். கூட்டணி கட்சிகளிடம் இருந்து சீட்டை பிடுங்கி 10 சீட்டை அண்ணியாருக்கு கொடுத்து குஷி படுத்தி இருக்கிறார். 10 பைசாவுக்கு தேறாத தே.மு.தி.கவுக்கு 10 சீட்டாம்! ஆஸ்கார் நாயகனிடமிருந்து ஒரு சீட்டையும் வாங்கி விட்டார். சப்பாணிக்கு ஒரு சீட்டும் இல்லை. ஆனால் லொடுக்கு பாண்டிக்கு ஒரு சீட். அது பற்றி கட்சிக்காரர்கள் கேட்டபோது, அவங்களும் தெலுங்கு, நாமும் தெலுங்கு அப்படி கொடுத்தால் தான் தெலுங்கை வளர்க்க முடியும் என்று கூறுகிறார்களாம். ஆக இதற்கு பலியாகி இருப்பது கூட்டணி கட்சியினர் தான். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோற்கும். ஏனென்றால் அந்தக் கட்சியிலும் உப்பு போட்டு சாப்பிடும் சிலர் இருப்பார்கள். அவர்களே அந்த கூட்டணியை தோற்கடிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.