தமிழக செய்திகள்

TN Assembly Election| ராஜபாளையம் தொகுதி கிடைக்காததால் நடிகை கவுதமி மீண்டும் ஏமாற்றம்

ராஜபாளையம் பொதுத்தொகுதியாக இருந்தாலும் கூட ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

நடிகை கவுதமி ஏற்கனவே பா.ஜ.க.வில் இருந்தார். கடந்த 2023-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இருந்து விலகினார்.

பின்னர் 2024-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

வருகிற சட்டசபை தேர்தலில் நடிகை கவுதமி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் களமிறங்க தயாராகி வந்தார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனுவும் அளித்தார்.

அ.தி.மு.க. தலைமை நடத்திய நேர்காணலிலும் பங்கேற்று ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரினார். இதனால் ராஜபாளையத்தில் போட்டியிட கவுதமிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஜான்பாண்டியனுக்கு தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. எனவே ராஜபாளையம் பொதுத்தொகுதியாக இருந்தாலும் கூட ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜான்பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் ஒதுக்கப்பட்டதால் நடிகை கவுதமிக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். கவுதமி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்.

அதேபோல் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ராஜூக்கள் சமூகத்தினர் ராஜபாளையம் தொகுதிக்குள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் அப்போது பா.ஜ.க.வில் இருந்த நடிகை கவுதமியை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக பா.ஜ.க. நியமித்தது. கவுதமி களப்பணியை மேற்கொண்டு வந்தார்.

ஆனால் 2021 தேர்தலின் போது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் அப்போது அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, சிவகாசி தொகுதிக்கு பதில் ராஜபாளையத்தில் களமிறங்கினார். இதனால் அப்போது நடிகை கவுதமிக்கான வாய்ப்பு நழுவியது. கடந்த 2023-ம் ஆண்டு கவுதமி பா.ஜ.க.வில் இருந்து விலக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததும் ஒரு காரணமாக இருந்தது.

இதனால் அ.தி.மு.க.வில் இணைந்து இந்த முறை ராஜபாளையம் தொகுதியில் களமிறங்க நினைத்த கவுதமிக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இதனால் கவுதமி மட்டுமின்றி, ராஜபாளையம் தொகுதியில் உள்ள கவுதமியின் ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.