தமிழக செய்திகள்

அத்துமீறிய சட்டமன்ற உறுப்பினர்கள், துணைபோன காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிபிஎம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குழு என்பதாலேயே, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக்குழு கலைக்கப்பட்டதாக தோன்றுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (12.11.2026) சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர்.நினைவகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1

அத்துமீறிய சட்டமன்ற உறுப்பினர்கள், துணைபோன காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திடுக

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் ஒரு பெண்ணிடம் கூறத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.

ஏற்கனவே ஒருமுறை அப்படி நடந்ததாகவும் அது குறித்து முதலமைச்சர் அலுவலகம் அவரை எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் அதே போன்ற ஒரு நிகழ்வு நடந்திருப்பதாக தெரிகிறது. இது உண்மையில் கடுமையான பிரச்சனையாகும்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள ஒருவரிடமே சட்டமன்ற உறுப்பினர் இப்படி நடந்து கொள்கிறார் என்பது பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.

குழந்தைகளும், பெண்களும் கடுமையாக பாலியல் வன்கொடுமைக்கும், சீண்டல்களுக்கும் உள்ளாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள சூழலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவதும், அவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் தவறுகளுக்கு அரசாங்கமே துணை போவதாக ஆகிவிடும்.

அநாகரீகமான வார்த்தைகளால் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கே தொந்தரவு என்று செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய தவறுகள் ஆரம்பத்திலேயே சரி செய்யப்படவில்லை என்றால் மிகப்பெரிய கேடுகளாக மாறும் ஆபத்து உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு உரிய முறையில் விசாரித்து இது உண்மை எனும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான எம்.ரவிசங்கர் தன்னிடம் தொகுதி பிரச்சனைகள் குறித்து முறையிட வந்த ஒருவரை தாக்கியதாக காணொளிகள் வெளியாகி உள்ளன.

மேலும், மருத்துவமனையில் இருந்தவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ‘தாக்குதல் எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்ல நிர்பந்தித்து காணொளி வெளியிடச் சொன்னதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு காவல் ஆய்வாளர் ஒருவரே உடந்தையாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில், அவர் மது கடைக்கு சென்றார் என்று காவல்துறை காணொளி வெளியிட்டது எந்த வகையிலும் பொருத்தமான நடவடிக்கை இல்லை. காவல்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது என்று எண்ணுவதற்கு எல்லா வாய்ப்பும் உள்ளது.

எனவே, இந்த பிரச்சனையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி தவறு செய்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் அத்துமீறல்களுக்கு துணை போன காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 2

ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக்குழு கலைப்பு உத்தரவை ரத்து செய்திடுக !

தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி திரு ஜோசப் குரியன் தலைமையிலான ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை கலைத்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குழு என்பதாலேயே இது கலைக்கப்பட்டதாக தோன்றுகிறது.

அந்த குழு ஏற்கனவே தனது பரிசீலனையையும் அதன் அடிப்படையிலான பரிந்துரைகளையும் முதல் தொகுதியாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமர்ப்பித்தது. அதனுடைய பணி அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவு பெறலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் தான், இந்த குழு கலைக்கப்பட்டிருக்கிறது; இது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நிதி, நிர்வாகம், சட்டமியற்றுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் தான் அதற்கு எதிரான போராட்டத்தை கடந்த காலத்தில், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் முன்னெடுத்தன. இதன் ஒரு பகுதியாகவே தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் இந்த குழுவை அமைத்தது.

அதனுடைய பணியை நிறைவேற்றுவதற்கு முன்பாக இப்படி கலைத்திருப்பது நியாயமற்ற செயலாகும். இதற்கு பதிலாக இந்தப் பணியை சட்ட கமிஷன் செய்ய இயலாது.

ஏற்கனவே ஏறத்தாழ முழுவதுமாக இந்த பணியை கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட குழு நிறைவேற்றி இருக்கும் நிலையில், அந்தக் குழுவை மீண்டும் இந்தப் பணியை நிறைவு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும், ஏற்கனவே இந்த குழுவை கலைத்து வெளியிடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT