ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை 
தமிழக செய்திகள்

சென்னையில் ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை- வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு

நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குறிப்பிட்ட உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்பட்டிருந்தாலோ, அந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

டெல்லியில் மாணவர் தங்கு விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

பருவமழை காலம் தொடங்க இருப்பதால் ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் கண்டு அதனை இடிக்க வேண்டுமென்று மாநகராட்சி கமிஷனர் சமீரன் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஆபத்தான கட்டிடங்கள்

சென்னை மாநகராட்சியில் ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் காணுதல், கட்டடத்தில் வசிப்பவர்கள், வழிப்போக்கர்கள் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க வேண்டும்.

விரிவான வழிகாட்டுதல்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள், பழுதடைந்த சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக வழங்கப்படுகின்றன. உதவி பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் தங்களுக்குரிய வார்டுகளுக்குள் உள்ள ஆபத்தான கட்டடங்களை, வழக்கமான தள ஆய்வுகளின்போது அடையாளம் கண்டு, அந்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

நீதிமன்ற வழக்கு

கட்டடத்தின் தன்மை, வயது மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்காக, அந்த இடத்தை பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அந்த சொத்து அல்லது கட்டிடம் தொடர்பாக உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கிடையே ஏதேனும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.

நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குறிப்பிட்ட உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்பட்டிருந்தாலோ, அந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கட்டிடத்தின் கட்டமைப்பு நிலைத்தன்மையை உறுதியாக மதிப்பிட முடியாத நிலையில், பொதுப்பணித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் அல்லது சென்னை ஐ.ஐ.டி. ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி, முறையான கட்டமைப்பு நிலைத்தன்மைச் சான்றிதழ் பெற வேண்டும்.

பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் கட்டிடத்திற்கு பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அந்த பணிகளின் அளவைப் பொறுத்து நியாயமான காலக்கெடுவிற்குள் அவற்றை மேற்கொள்ளுமாறு கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்த வேண்டும்.

உரிமையாளர் அந்த அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சென்னை மாநகராட்சியால் அந்த கட்டடம் இடிக்கப்படும். மேலும், கட்டிடத்தை இடிப்பதற்காக மாநகராட்சிக்கு ஏற்பட்ட செலவுகள் கட்டட உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும்.

ஆபத்தான கட்டடத்தை காலி செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறும் அல்லது காலி செய்ய மறுக்கும் எந்த நபரையும், காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் அங்கிருந்து வெளியேற்றலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT